ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக அமைதி காக்கும் முதலமைச்சர்.... கொதிப்பில் ஆசிரியர் சங்கங்கள்

 


*ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக அமைதி காக்கும் முதலமைச்சர்.... கொதிப்பில் ஆசிரியர் சங்கங்கள்* 

''திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆசிரியர்களுக்கு அதிமுக அரசு எதுவும் செய்யாது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன் எனக் கூறினார், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர். இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் காலம் ஆகியும் எதுவும் பேசவில்லை'' என ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளியை அதன் நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாயவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை வழங்க வேண்டும். உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து பகுதி நேர, தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நாள் 16.11.2012க்கு முன்னர் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களின் பணிக் காலத்தை மட்டுமே தேவையான தகுதியாகக் கொள்ள வேண்டுமே தவிர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக நிராகரித்து, அதற்கு தேவையான சட்டவிதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.எங்கள் கோரிக்கைகள் அரசு தலையிட்டு தீர்க்கக்கூடிய கோரிக்கைகள் தான். அரசு தலையீடு இல்லாமல் நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் புதிதல்ல, எதிர்க்கட்சியாக இருந்த போது, இன்றைய ஆட்சியாளர்கள் எங்களுக்கு ஆதரவு தருவதாக சொல்லி கொடுத்த வாக்குறுதிகளை தான் நிறைவேற்றச்சொல்லி போராடி கொண்டிருக்கிறோம்.

எங்கள் போராட்டம் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிரானது இல்லை. எங்கள் பிரதான கோரிக்கைகள் ஏற்க முடியாத நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருப்பதால், நாங்கள் திட்டமிட்டபடி வருகிற ஜூலை 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.அதுவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் அடையாளமாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 1000 ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு குழு அமைக்கும் எனவோ, ஆந்திரா, தெலங்கானா குறித்தோ கூறவில்லை. ஆனால் இப்பொழுது அதனை காரணமாக சொல்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.