அகவிலைப்படி ஜுலை 22 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஊதிய குறைபாடு தொடர்பாக குழு அமைப்பதை விட நேரிடையாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்

 

அகவிலைப்படி ஜுலை 22 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஊதிய குறைபாடு தொடர்பாக குழு அமைப்பதை விட நேரிடையாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகஅரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த அகவிலைப்படியானது 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆறு மாதங்கள் கழித்து 01.01.2023 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது. கொரோனா நோய் தாக்குதல் காலத்தில் 21 மாத அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த முறை 6 மாத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 6 மாத காலத்திற்கான அகவிலைப்பிடியை வழங்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு விடுபட்ட அகவிலைப்படி அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 


மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே 6ஆவது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை கலைவதற்காக ராஜூவ்ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் பத்மநாபன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ் ஆகிய மூவர் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 7ஆவது ஊதியக்குழு தொடர்பான குறைபாடுகளை நீக்க சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் பணீந்தரரெட்டி ஐஏஎஸ், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இதுவரை நான்கு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தபடியே உள்ளது. தற்போது 5ஆவதாக ஒரு குழு அமைப்பதாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்குழு விசாரணை அறிக்கை வழங்குவதற்கு காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்படி அடுக்கடுக்கான குழுக்களால் பலனேதும் விளைந்து விடுமா என்ற கேள்விக்குறி எழுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான நியாயத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் இந்த கோரிக்கைகளை ஆதரித்து பலமுறை பேசினார். இதன் நியாயத்தை உணர்ந்து தங்களது தேர்தல் அறிக்கையிலும் இணைத்துக் கொண்டார். கோரிக்கையில் உள்ள நியாயம் வெளிப்படையாக தெரிந்த நிலையில், குழு அமைப்பது தேவையற்ற காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதுவே கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிரந்தரமான எளிய வழியாகும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்புடன் 

ந.ரெங்கராஜன்

பொதுச்செயலாளர், TESTF. இணை பொதுச்செயலாளர், AIPTF.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.