தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்க படும் விபரம் இதோ

_*தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை! கல்வித்துறை அமைச்சர் தகவல்*_ தமிழ் மொழி இலக்கிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், கலைத்திறன் மற்றும் அறிவியல் போன்ற திறன்களை வெளிக்கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய தேர்வு பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதமும், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் 50 சதவீதமும் பங்கு பெற வழி வகுக்கப்பட்டது. இதன்படி 1500 மாணவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வில் 2,50,731 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த திறனறிவு தேர்வில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அபிநயா என்ற மாணவி 100க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்வில் தேர்வானவர்களில் பெரும்பாலும் மாணவிகளே உள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட இந்த தேர்வில் தேர்வான 1500 மாணவ மாணவியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்க அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உலகளாவிய புத்தகக் கண்காட்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 26 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 18 நாடுகள் பங்கு பெற ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நமது மொழியில் உள்ள புத்தகங்களை பிற நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்க நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.