21 பட்டப் படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றது அல்ல எனத் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எந்தெந்த பல்கலைக்கழகம் என்ன படிப்பு என்பது பற்றிய முழுவிபரம்*

 நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பலதரப்பட்ட உயர் கல்வி படிப்புகளை பல்வேறு பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பட்டப் படிப்புகளில் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையாகாது என்பதை உயர்கல்வித்துறை முடிவு செய்து விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி 21 பட்டப் படிப்புகள் அரசு பணிக்கான கல்வி தகுதிக்கு இணையானது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலையின் எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல், பனாரஸ் ஐஐடி மற்றும் வாரணாசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல், பாரதிதாசன் பல்கலையின் எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி., வேதியியல் தகுதிக்கு இணையானவை அல்ல. இவர்களால் எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதேபோல், சென்னைப் பல்கலை. வழங்கும் பி.காம்., கார்ப்பரேட் செக்ரட்ரஷிப், அழகப்பா பல்கலை.யின் எம்.காம்., கார்ப்பரேட் செக்ரட்ரஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம்., எம்.காம்., ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல. மேலும், கோவா பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. மற்றும் பெங்களூரு பல்கலை. வழங்கும் பிஏ., ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது. இது தவிர திருச்சி பாரதிதாசன் பல்கலையின் எம்.எஸ்., தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பானது எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலையின் எம்.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி., இயற்பியலுக்கும் இணையானதல்ல.

அழகப்பா பல்கலையின் பி.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பிஎஸ்.சி., அறிவியல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி., இயற்பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது. மேலும், பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல” என உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.