பள்ளி ஆசிரியர் தாக்குதல். ஆசிரியர் கூட்டணி கண்டனம்

 தூத்துக்குடி மாவட்டம் நம்பிபுரத்தில் ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாக்குதல் சம்பவம் தொடராதிருக்க ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். 



தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம்  நம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவை பார்க்கும் போது மனிதநேயமே இல்லாமல் வன்முறை குணத்தோடு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. அடுத்தவர் வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளாக நினைத்து கல்வி போதித்து, நல்லொழுக்கம் கற்றுத் தரும் ஆசிரியர்களை தாக்குவதற்கு எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லை. எந்த நிலையிலும் இந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிறது.  உடனடியாக மீதமுள்ள நபரையும் கைது செய்ய வேண்டும். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது போன்ற ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலுமாக நீக்கிடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் எளியவர்கள் என்ற கருத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற செயல்கள் இனி மேலும் தொடராத வகையில் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தாவது, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு ஆசிரியர்கள் நலன், கல்வி நலன் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் 

ந.ரெங்கராஜன், பொதுச்செயலாளர், TESTF. இணைப் பொதுச்செயலாளர், AIPTF.

பொதுச் செயலாளர், WTTF.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.